×

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிஎப் மேம்பால பணிக்கு டெண்டர் : ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கும்

சென்னை: கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிஎப் மேம்பால கட்டுமான்ப் பணிக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரட்டூர் பிரதான சாலை மற்றும் தெற்கு ஐ.சி.எப் சாலைக்கு இடையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடப்படுகிறது. பல ரயில்கள் கடக்கும்போது 30 நிமிடங்கள் வரை மூடப்படும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த லெவல் கிராசிங்கிற்கு மாற்றாக, மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கொரட்டூர் பிரதான சாலையையும், தெற்கு ஐ.சி.எப் சாலையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் 2003ம் ஆண்டு தயார் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை இணைந்து செயல்படுத்தப்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்த 58.50 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஐ.சி.எப். நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கான தொகையும் அடங்கும்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கு தேவையான 1222 சதுர அடி நிலத்தை மாநகராட்சிக்கு அளிக்க கோரி சென்னை மாநகராட்சி சார்பில் ஐபிஎப் பொது மேலாளருக்கு 2017ம் ஆண்டு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஐசிஎப் பொது மேலாளார் 35 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சிக்கு அந்த நிலத்தை அளிக்க ஒப்புதல் அளித்தார். ேமலும் இதற்காக 10 கோடி செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.  இதற்கிடையில், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை அகற்ற கோரியும் கடிதம் எழுதப்பட்டது. இந்த பணிகளுக்கு தேவையான நிதியை கடந்த நவம்பர் மாதம் மாநகராட்சி ஒதுக்கீடு செய்தது. அதன்படி நில எடுப்பு பணிக்காக 10 கோடியும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு 60 லட்சமும், மின்சார வாரியத்திற்கு 55 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நிலம் எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. 21.30 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள பால பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானப் பணிகள் 540 நாட்களில் முடிவடையும் என கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICF Superior Service , ICF Superior Service , 15 years, Work begins in April
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...